×

முதலையை பராமரிக்கும் தொழிலை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘முதலைகளும், பாம்புகளும் நம்ம வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் போன்றவைதான்’’ என பேச ஆரம்பித்தார் சென்னை வடநெம்மேலியில் அமைந்துள்ள முதலைப் பண்ணையின், உயிரியல் பூங்கா கல்வியாளர் (Zoo educator ) டிம்பிள் மதுமிதா. ‘‘என்னுடைய ஊர் கோயம்புத்தூர். முதுகலை விலங்கியல் படிச்சேன். படிப்பு முடிச்சிட்டு பள்ளி, பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்களுக்கு விலங்கியல் பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் செயல் முறை விளக்கங்களுடன் வீடியோக்களை செய்து கொடுத்து வந்தேன்.

எனக்கு கல்வி சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று விருப்பம். அதற்காக ஆசிரியர் பணியில் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் விலங்கியல் துறை சார்ந்த விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். அதனால் சில காலம் கன்டென்ட் ரைட்டராக ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு விலங்குகள் மேல் தனிப்பட்ட ஆர்வமுண்டு. அவைகளை பற்றி தெரிந்து கொள்ளத்தான் நான் விலங்கியல் படிப்பை தேர்வு செய்தேன். என்னுடைய அந்த ஆர்வம்தான் என்னை முதலைப் பண்ணையின் கல்வியாளர் பணியில் ஈடுபட வைக்க காரணம். இங்கு வந்த பிறகுதான் நான் முதலை மற்றும் ஊர்வன குறித்து முழுதாக படிச்சு தெரிந்து கொண்டேன்.

நான் உயிரியல் பூங்கா கல்வியாளராக வேலைக்கு சேர்ந்து ஒன்றரை வருடங்கள் தான் ஆகிறது. இங்கு என்னுடைய முக்கியமான வேலை பண்ணையை சுற்றிப் பார்க்க வரும் மாணவர்களுக்கு அவைகளின் பண்புகள் குறித்து சொல்லிப் புரிய வைக்க வேண்டும். அதனை மாணவர்கள் எளிதாக புரியும் வகையில் நாங்க சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். சாதாரணமாக வகுப்பில் பாடங்கள் நடத்தும் போது, கரும்பலகையில் படங்கள் போட்டுதான் சொல்லித் தருவார்கள்.

அப்படி சொல்லிக் கொடுத்தும் அவர்களுக்கு நியாபகம் வைத்துக் கொள்வது கஷ்டம். ஆனால் மிருகக்காட்சியகத்தில் நேரடியாக மிருகங்களை காட்டி சொல்லும் போது அவர்கள் மனதில் எளிதாக பதியும். மேலும் பார்த்து படிக்கும் போது சுலபமாக புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு ஏற்ப நாங்க தனிப்பட்ட விளக்கங்களை அமைத்திருக்கிறோம். அதாவது, பள்ளியில் இருந்து குழந்தைகள் வரும் போது, அவர்களின் வயது, வகுப்பிற்கு ஏற்ப நாங்க முதலைகள் குறித்து விளக்கங்கள் அளிப்போம். அவர்கள் பண்ணையை விட்டு வெளியே போகும் போது, இங்குள்ள ஒவ்வொரு விலங்கின் பண்புகளையும் தெரிந்து கொள்வார்கள்.

இங்கு 15 வகை முதலைகள் உள்ளன. சாதாரணமாக வருபவர்களுக்கு அவை அனைத்தும் முதலைகள் தான். ஆனால் ஒவ்வொரு முதலையின் தன்மை, வளர்ச்சி, உணவு என அனைத்தும் மாறுபடும். அவர்கள் அதனைப் பற்றி நினைவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு நாங்க சொல்லிக் கொடுப்போம். முதலை மட்டும் இல்லாமல் நிலத்தாமை, கடலாமை, பாம்பு, பல்லி வகைகள் பற்றியும், எளிமையாக புரியும் வகையில் சொல்லிக் கொடுப்போம். பாம்பிலிருந்து எப்படி விஷம் எடுக்குறாங்க என்பதையும் விளக்கி காட்டுகிறோம்’’ என்றவர் பண்ணையில் உள்ள மிருகங்களை பற்றி விளக்கினார்.

‘‘பொதுவாக ஊர்வன வகை உயிரினங்களை பார்த்தாலே அது விஷத்தன்மை கொண்டது, நம்மை தாக்கி கொல்லக்கூடியது என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அவைகளும் ஓர் உயிரினங்கள், மற்றவர்களை பாதுகாப்பது போல இந்த உயிரினங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எங்களுடைய விளக்கங்கள் இருக்கும். இவர்களின் மேல் இருக்கும் பயத்தை போக்கும் விதமாக மாணவர்கள் வரும் போது அவர்கள் முன்னிலையில் முதலைகள், ஆமைகள் மற்றும் இதர விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, அவர்களின் அடைப்புகளை சுத்தம் செய்வது, அவர்களின் பெயர்களை சொல்லி அதன் தன்மையை விளக்கும் போது எளிதாக புரிந்து கொள்ள உதவும்.

இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இங்கிருக்கும் ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு பெயர் உண்டு. அந்தப் பெயரை வைத்துதான் அவர்களை அழைப்போம். மாணவர்கள் இங்கிருந்து செல்லும் முன் அவர்கள் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மறுமுறை வரும் போது கேட்கிறார்கள். அதுதான் எங்களுக்கான சக்சஸ்’’ என்றவர் பண்ணையின் விருச்சுவல் ரியாலிட்டி கருவிப் பற்றி விளக்கம் அளித்தார்.

‘‘பண்ைணயின் மிகவும் முக்கியமான அம்சம் VR கருவி. Virtual Reality கருவி மூலம் உலகிலுள்ள ஊர்வன உயிரினங்களை அவர்கள் அருகில் காட்சிப்படுத்துவதால், அதன் தன்மைகளை எளிதாக விளக்க முடியும். அதில் மொத்தமாக மூன்று ஊர்வன வகைகளின் படங்களை நாங்க ஸ்ேடார் செய்திருக்கிறோம். இதன் முக்கிய நோக்கம், ஒரு பொருளை பற்றி கேட்பதை விட அதனை நேரில் பார்க்கும் போது அது பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடியும்.

அதே போல் அதனை மிக அருகில் பார்க்கும் போது நாம் கொடுக்கும் விளக்கம் அதன் மேல் ஒரு புரிதலை ஏற்படுத்தும். இந்தக் கருவியினை இங்கு முன்பு பணியாற்றிய ஸ்டெபி ஜான் என்றவர்தான் இங்கு கொண்டு வர முயற்சி செய்து, அதனை செயல்படுத்தியும் உள்ளார். தற்போது எங்களிடம் 15 VR Gear கருவிகள் செயல்பாட்டில் உள்ளது. பண்ணையில் மட்டுமில்லாமல் இந்தக் கருவியினை நாங்க புறநகர் பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு சென்று அங்கு உள்ள மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு. காரணம், புறநகர் பகுதியில் படிக்கும் மாணவர்களால் உயிரியல் பூங்காவிற்கு நேரடியாக வந்து தெரிந்து கொள்வது என்பது சிரமம்.

அப்படியும் சில பள்ளிகள் முயற்சி செய்து மாணவர்களை அழைத்து வருகிறார்கள். மற்றொரு காரணம் பாம்பு மற்றும் சில வகை உயிரினங்களை பார்த்தால் அதனை அடிச்சு விரட்டுகிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். அதற்காகவே வார நாட்களில் VR Gearஐ பள்ளிகளுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுவரை சென்னை மற்றும் சென்னை புற நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு VR கருவியை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மற்றும் அரசுப் பள்ளிகளுக்கும் இந்தக் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றவர் உயிரினங்களின் பாதுகாப்பு முறைகள் பற்றி விவரித்தார்.

‘‘முதலை மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பிற்கு எந்தவித இன்னல்களும் ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறோம். 24 மணி நேரமும் இங்கு இரண்டு கால்நடை மருத்துவர்கள் இருப்பாங்க. மேலும் அவைகளை பாதுகாப்பவர்கள், அவற்றின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருப்பார்கள். அதில் சின்ன மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவ உதவியினை மேற்கொள்வோம். பார்வையாளர்கள் வரும் போதும் ஆங்காங்கே காவலர்கள் இருப்பார்கள். எங்களுக்கு அடைப்பிற்குள் இருக்கும் முதலையை விட அதனை பார்க்க வரும் பார்வையாளர்களை கண்டால்தான் பயமாக இருக்கும்.

காரணம், அவர்கள் தங்கள் கையில் இருப்பதை உள்ளே வீசி எறிவார்கள். முதலைகள் நகர்வதில்லை என்று தின்பண்டங்களை உள்ளே போடுவார்கள், குழந்தைகளை கம்பிகள் மேல் ஏற்றி காண்பிப்பார்கள். அதனை தடுக்கதான் காவலர்கள்’’ என்றவர் உயிரினத்தை தத்து எடுக்கும் முறைகள் குறித்து பகிர்ந்தார்.‘‘வெளிநாடுகளில் ஆமை, உடும்பு, பாம்பு போன்ற உயிரினங்களை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து இங்கும் ஆமை, பாம்பு, இக்வானா போன்றவற்றை வீட்டில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நிறைய உயிரினங்களை வீடுகளில் வளர்க்க தடையுள்ளது. ஒரு சிலர் அதனையும் பராமரிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அவர்களுக்குதான் இந்த தத்து முறை. அவ்வாறு தத்து பெறப்படும் முதலையின் ஓராண்டிற்கான உணவு, மருத்துவ செலவினை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பண்ணையின் சார்பாக சில சலுகைகளை வழங்குகிறோம். இங்கு காரியல், அமெரிக்கன் அலிகேட்டர், டோமிஸ்டோமா, ப்ளாக் கெய்மன், குவியர் கெய்மன், உப்பு நீர் முதலை, சியாமி முதலை, நைல் முதலை, மோர்லெட்டின் முதலை போன்ற எண்ணெற்ற முதலை வகைகள் உள்ளன. மேலும் கடலாமை, நிலத்தாமை மற்றும் சில அரிய பாம்பு வகைகளும் உள்ளன. இங்கிருப்பதிலேயே ஓடின் மற்றும் ப்ரேயாதான் மிகவும் வயதான ஜோடி முதலைகள்.

உப்பு நீர் முதலையான ஜாஸ் III இந்தியாவிலேயே மிகவும் நீளமான முதலை. அல்டாப்ரா எனும் ஆமை உலகின் இரண்டாவது பெரிய ஆமை வகை. ஜாஸ் III முதலை இப்போது உயிருடன் இல்லை என்பதால், அதன் தோல் மற்றும் மற்ற ஊர்வன விலங்கின் ஒருசில உறுப்புகளையும் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக பண்ணையில் வைத்திருக்கிறோம். தற்போது 36 பேர் இங்கு வேலை செய்கிறார்கள். மற்றவர்கள் கான்ட்ராக்ட் முறையில் அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வேலைக்கு வருகிறார்கள்.

மேலும், இங்கு மாதாமாதம் வாலன்டியருக்கான தேர்வு நடைபெறும். அதில் ஊர்வன குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி எடுக்க விரும்புபவர்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து இன்டெர்ன்ஷிப்க்காக வருபவர்களும் இந்தப் பயிற்சியினை மேற்கொள்வார்கள். பயிற்சி பெற்றவர்களில் மூன்று நபர்களை நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்போம். அவர்கள் ஒரு மாத காலம் இங்கு தங்கி அனைத்து பகுதியிலும் உள்ள வேலையினை கற்றுக் கொள்ள வேண்டும். அதில் பெண்கள்தான் அதிகமாக இந்த வேலையில் ஈடுபட விரும்புகிறார்கள்’’ என்றார் டிம்பிள்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post முதலையை பராமரிக்கும் தொழிலை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்! appeared first on Dinakaran.

Tags : Dimple Madhumita ,Vadanemmeli, Chennai ,Coimbatore ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...